நொய்டா அருகில் நிதாரி கிராமத்தில் நடந்துள்ள படுகொலைகள் எத்தனை மோசமான சமூகத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்கிற அதிர்ச்சியைத் தருகின்றன. கொலையுண்ட அனைவருமே 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் கொடூரம்.கொலையின் கோரங்களும் நோக்கங்களும் தெரிய வர வர, மனம் பதறுகிறது.
இக்கொடூரக்கொலைகளின் பின்னணி மர்மம் குறித்து பலப்பல செய்திகள் உலா வருகின்றன.
1). மனித உறுப்புக்களை விற்பதற்காக
2). சடலங்களுடன் கொள்ளும் பாலியல் வன்மங்களுக்காக (Necrophilia)
3). பயங்கரமான மதச் சடங்கிற்காக-என்றும்
பல கருத்துகள் உலா வருகின்றன. மிகுந்த மன பிறழ்வும் விகாரமுமடைந்த மனிதர்களின் செயல்கள் இவை என்பதில் சந்தேகமில்லை. இந்த விகாரமும் விவகாரம் குற்றம் புரிந்தவர்களுடன் மட்டுமே முடிவது என்று நாம் கூற இயலாது.
சிறுவர்-சிறுமிகள் காணாமல் போனது பற்றிய புகார்களில் அக்கறை செலுத்தாத காவலர்கள், அப்பகுதி துப்புரவு மற்றும் நகரசபை தொழிலாளர்கள், அலுவலர்கள், மெளனத்தில் மூழ்கியா அக்கம் பக்கத்து மக்கள் என்று நிறையப் பேர் விசாரிக்கப்படவேண்டியவர்கள்.
" இது ஒரு தேசிய அவமானம்" என்கிற எல்.கே.அத்வானியின் கூற்று சரியானதே!
"இந்த சம்பவத்தை அரசியல் கோணத்துடன் அணுகுவது சரியல்ல" என்று கூறிய அவர், "இதுதொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்றார். ஆனால் அரசியல் கட்சிகள் எதுவும் அடுத்து வரும் உ.பி. மாநிலத் தேர்தலில் இக்கொடுமையான சம்பவத்தை பயன்படுத்தாமல் இருக்கும் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.
பாதிக்கப்பட்ட பெற்றோரும், பிறரும் மிகுந்த கொதிப்புற்று கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 'சட்டத்தை யாரும் கையிலெடுக்கக் கூடாது' என்று உபதேசம் செய்யுமுன் அவர்களின் மனநிலையைப் புரிந்து, குற்றம் நிரூபணமானதும் கடும் தண்டனைத் தரப்படும் என்கிற உறுதியை அவர்களுக்கு அரசு அளிப்பது சற்றே ஆறுதலாக இருக்கும். அரபு நாட்டுத் தண்டனைகள் வருங்காலத்தில் இத்தகைய அவலங்கள் நிகழாதிருக்க உதவும்.
இந்நிலையில் இன்று வந்த தினமணி செய்தி, மனித உறுப்பு வியாபாரத்துக்காக இக்கொலைகள் நடக்கவில்லை என்று சொல்லும் வகையில் மனித உறுப்புகளின் 12 மூட்டைகள் சிக்கியதாக கூறுகிறது.
எதுவாக இருந்தாலும் முறையான விசாரணை நடந்து இதன் பின்னணியில் இருக்கும் யாரும் தப்ப முடியாத படி - எவ்வித குறுக்கீடுகளும் இல்லாமல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கச்செய்து இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அச்சு மற்றும் மின் ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வர வேண்டும்.