Wednesday, May 30, 2007

தன் முயற்சியில் தளரா 'தேர்தல் மன்னர்'.

K.பத்மராஜன் என்பது அவர் பெயர். 49 வயதில் 83ம் முறையாக தேர்தல் களம் காணும் அவர் இப்போது ஜூன்15ல் நடக்கவிருக்கும் மாநிலங்களவைதேர்தலிலும் நிற்கிறார். மதுரை மேற்கிலும் களம் காணவிருப்பதாக பெருமையாக கூறிக்கொள்கிறார்.

அப்துல்கலாம், மன்மோஹன்,சோனியா, வாஜ்பாய், ஜெயலலிதா என்று அனைத்து பெருந்தலைகளுக்கு எதிராகவும் போட்டியிட்ட வரலாறு வைத்திருக்கும் அவர், சாதாரண மனிதனுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கவே 'களம்' காண்பதாகக் கூறுகிறார். (பின்னே, ஏதாவது சொல்ல வேண்டுமில்லையா!)
ஒருவேளை, 'யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது' குறளை அறிந்திருக்கலாம்?!

மாநிலங்களவை வேட்பாளர்களுக்கு குறைந்தது 20 ச.ம.உக்களின் ஆதரவுக்கையெழுத்து வேண்டுமாதலால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிடுவது உறுதி தான் எனினும் திரும்பப்பெறும் வகையில் காப்புத்தொகை ரூ.5000/- கட்டியுள்ளார்.

மக்கள் மன்ற தேர்தல்களில் வெற்றியின் 'இடம்' கிடைக்காவிட்டாலும், கின்னஸ் என்னும் காகித மன்றத்தில் இடம் கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார்.

இதுவரை தேர்தல்களில் பத்து இலட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக கூறும் இவருக்கு, அது ஒரு வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான போஸ்டர் செலவு என்பது தெரியுமா என்று தெரியவில்லை.

வாழ்த்தி வைப்போம்!

நன்றி: The Hindu News update Service 30/05/2007

Monday, May 14, 2007

இட்லிவடைக்கு சட்னி

'இட்லி வடை' யின் பெரியார் பதிவுக்கு நாம் அளித்த சட்னி, சாரி, பின்னூட்டம்:

'பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பார்ப்பானை அடி' என்று பெரியார் சொன்னதாகச் சொல்லப்படுவதற்கு யாராவது ஆதாரம் கொடுக்க முடியுமா, ப்ளீஸ்.

பார்ப்பானை அவர் எதிரியாக நினைக்கவில்லை, பார்ப்பனீயத்தைத் தான் கடுமையாக விரோதித்தார் என்பதற்கு அவர் இராஜாஜியுடன் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு நல்ல உதாரணம். அரசியல் சமூக வானில் ஒரு பெரியார் தோன்றுவதற்கு இராஜாஜி காரணமாக இருந்தார் என்பது இறைச்சித்தம் தான்.

'மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டாத கடவுளை வணங்குவதில் யாருக்குத்தான் தடையிருக்க முடியும்' என்பதும் பெரியாரின் பொன்மொழி தான். அவரை ஒற்றைப்பரிமாணத்தில் காட்ட முனைந்த முனைப்பில் இத்தகைய கருத்துக்கள் காணாதொழிந்தன. திராவிடக் கட்சிகளே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

இன்றைக்கு பார்ப்பனீயம் பார்ப்பனர்களிடம் மட்டுமின்றி, அவர்களை விடவும் அதிகமாக, மற்ற ஆக்களிடம், மற்ற தளங்களிலும் இருக்கிறது என்பதை 'பக்தர்'களும் ஒத்துக்கொள்ள வேண்டும்.அதுபோல, பெரியாரை இன்னமும் ஈ.வே.ரா என்றே இன்னமும் விளித்து, இழிவுபடுத்துவதாக நினைக்கிற கேணத்தனத்தை '.......க்குஞ்சுகளும்' விட்டு விடவேண்டும்.

இன்றைய சமூக மாற்றத்துக்கு தலையாய காரணமான ஒருவரை 'பெரியார்' என்று ஏற்றுக்கொள்ள எந்த பாசமும் குறுக்கீடு செய்யக்கூடாது.பெரியாராக இருந்தாலும் விமர்சனத்துக்கு அப்பாற்படுவதில்லை என்பது பெரியாரே வலியுறுத்திய உண்மை.

பெண்ணியச்சிந்தனைகள் இன்று பட்டொளி வீசிப்பறக்க முதன்மை காரணம் பெரியார் தாம். யார் மறுக்க இயலும். ஒருபக்கம் எதிர்த்தாலும், அதன் தாக்கத்தால் அதை அதிகம் இன்று ஏற்றுச்செயல்படுத்துபவர்கள் பிராமண வகுப்பினரே என்பதும் உண்மை.பெரியாரின் தேவை தீர்ந்துவிடவில்லை என்பதை திராவிட இயக்கங்களே நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

பெரியாரைப் படமெடுத்துக்காட்டுவதை விடவும், ஆராய்ந்து படிப்பினை பெறுவதற்கு ஏராளமிருக்கிறது - இரு தரப்பாருக்கும்!
May 13, 2007 4:49 PM