Wednesday, May 30, 2007

தன் முயற்சியில் தளரா 'தேர்தல் மன்னர்'.

K.பத்மராஜன் என்பது அவர் பெயர். 49 வயதில் 83ம் முறையாக தேர்தல் களம் காணும் அவர் இப்போது ஜூன்15ல் நடக்கவிருக்கும் மாநிலங்களவைதேர்தலிலும் நிற்கிறார். மதுரை மேற்கிலும் களம் காணவிருப்பதாக பெருமையாக கூறிக்கொள்கிறார்.

அப்துல்கலாம், மன்மோஹன்,சோனியா, வாஜ்பாய், ஜெயலலிதா என்று அனைத்து பெருந்தலைகளுக்கு எதிராகவும் போட்டியிட்ட வரலாறு வைத்திருக்கும் அவர், சாதாரண மனிதனுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கவே 'களம்' காண்பதாகக் கூறுகிறார். (பின்னே, ஏதாவது சொல்ல வேண்டுமில்லையா!)
ஒருவேளை, 'யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது' குறளை அறிந்திருக்கலாம்?!

மாநிலங்களவை வேட்பாளர்களுக்கு குறைந்தது 20 ச.ம.உக்களின் ஆதரவுக்கையெழுத்து வேண்டுமாதலால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிடுவது உறுதி தான் எனினும் திரும்பப்பெறும் வகையில் காப்புத்தொகை ரூ.5000/- கட்டியுள்ளார்.

மக்கள் மன்ற தேர்தல்களில் வெற்றியின் 'இடம்' கிடைக்காவிட்டாலும், கின்னஸ் என்னும் காகித மன்றத்தில் இடம் கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார்.

இதுவரை தேர்தல்களில் பத்து இலட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக கூறும் இவருக்கு, அது ஒரு வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான போஸ்டர் செலவு என்பது தெரியுமா என்று தெரியவில்லை.

வாழ்த்தி வைப்போம்!

நன்றி: The Hindu News update Service 30/05/2007

No comments: