Saturday, January 06, 2007

மனிதனின் வன்முறை உணர்வு

சமீபத்தில் (1972ல் அல்ல), இரண்டு மூன்று நாட்களுக்கு முன் 'தீராநதி'யில் பிரேம்-ரமேஷ் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தேன். மனிதனின் வன்முறை உணர்வு பற்றி சுவையாக எழுதியிருந்தார். சில பத்திகளை எடுத்து இங்கு பதிகிறேன். கருத்திருப்பவர்கள் பகிர்ந்துக்கொள்ளுங்கள்::

பயங்கரவாதம் என்றவுடன் நமக்கு நினைவூட்டப்படுவது சில கட்டடங்களின் தகர்ப்பு, சில ரயில் வெடிப்பு, சில தலைவர்கள் கொலை செய்யப்படுவது என்பவை போன்றன. உண்மையில் நம்மை நடுங்கச் செய்யும் நிகழ்வுகள்தாம் இவைகள், ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War on Terrorism) என்பது அதைவிட நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியதல்லவா. 2001 ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிக்கு முன், உலகில் எங்கும் பயங்கரங்கள், வன்முறைகள் நடக்காதது போலவும், அன்றுதான் மனித குலத்துக்கே நாசம் வந்து சேர்ந்ததாகவும் தொடங்கப்பட்ட பேச்சுக்கள், கட்டமைக்கப்பட்ட கருத்துக்கள், எத்தனை வன்கொடுமையானது. அதனை ஒரு சாக்காக வைத்து ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் தரைமட்டமாக்கப்பட்டது, பேரன்பின் அடையாளம் போலப் பேசப்படுகின்றன. இராக்கில் சில மனித உரிமை அமைப்புகளின் கணக்குப்படி உயிரிழப்பு பன்னிரண்டு இலட்சங்களைத் தாண்டுகிறது. தினம் இரண்டு மூன்று கார் குண்டு வெடிப்புகள் ர்ராக் மண்ணில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சரி இதனால் ‘பயங்கர வாதம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு வன்முறை நியாயமானதாகி விடுமா. இல்லை; எல்லா வன்முறைகளும் கொடூரமானதே. ஆனால், மனிதர்கள் அதைப் பெருக்கிக் கொண்டே இருப்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? நாம் எப்பொழுதும் வன்முறை செலுத்த, பிறர் மீது செலுத்தப்படும்போது பார்த்து ‘ரசிக்க’ தயாராக இருப்பதற்கு எல்லாவிதமான தயாரிப்புகளும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
பயங்கரவாதம் என்பது போர் அல்ல, போர் செய்ய முடியாதவர்களால் போர் வலிமை உடையவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை. அதில் ஒரு அரசு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு மதம், ஒரு வர்க்கம், ஒரு தலைமை எது வேண்டுமானாலும் குறிவைக்கப்படலாம். எந்த வகையிலும் அத்துடன் தொடர்பற்ற மக்களும் பாதிக்கப்படலாம். அது திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்படும் ஒரு வன்கொடுமை. இதைச் செய்பவர்களின் நோக்கம் தீர்வு அல்ல, வெறும் எதிர்ப்பு_வெறுப்பு; இதற்குப் பின்னுள்ள பிரச்சினையை நோக்கி அனவைரையும் இழுத்துவிட அவர்கள் செய்யும் முயற்சி. இது ஒரு ‘நவீனத்தொழில் நுட்பம்’. நவீன அழிவுக் கருவிகளால், உத்திகளால் நிகழ்த்தப்படுவது. சில ஆய்வாளர்கள் இது வெகுசன ஊடகங்களின் காலகட்டத்தில், ஊடகங்களில் இவற்றிற்கான சொல்லாடல் களத்தை ஏற்படுத்துவதற்காகவே செய்யப்படுபவை என்று கூறுகிறார்கள். ‘தனிநபர் பயங்கரவாதம்’ என்பதோ, இயக்கங்களின் திட்டமிடுதலில் நடப்பதோ, எதுவானாலும் அதில் ஈடுபடுபவர்களுக்கும் அவர்கள் யாருக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கவே செய்யும். மக்கள், இனங்கள், சமூகங்கள், தேசங்கள் என்பவை இதிலிருந்து தம்மைத் தூரப்படுத்திக் கொள்ளவே செய்கின்றன. ஆனாலும் இது எப்பொழுதும் நடந்துகொண்டே இருந்திருக்கிறது என்பதுதான் நமக்கு முன் உள்ள கேள்வி. ‘நவீன பயங்கரவாதம்’ என்பது வேண்டுமானால் இருபதாம் நூற்றாண்டின் உருவாக்கமாக இருக்கலாம். ஆனால் படுகொலை, வன்கொடுமை, திட்டமிட்ட தனித்தாக்குதல் என்பவை மனித இன வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே நடந்து கொண்டே இருப்பதுதானே. இங்குதான் சிக்கல் எழுகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களின் ‘அறம்’ வன்முறையை மனிதர் மீது மனிதர் செலுத்தும் வன்கொடுமையை எதிர்க்கிறதா; அல்லது அதிகாரபூர்வமான, நியாயப்படுத்தப்பட்ட வன்முறை நிறுவனங்களைத் தவிர (அரசுகள், இராணுவங்கள், பலவகைப்படைகள்) வேறு யாரும் வன்முறையில் ஈடுபடுவதை எதிர்க்கிறதா. இதற்குப் பதில் கூறப் போகும் முயற்சியில்தான் ‘மனிதர்கள் அடிப்படையில் வன்முறையானவர்கள்’ என்ற வாசகம் நம்மை எதிர்கொள்கிறது.
இருபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த சில பயங்கரங்களை, பாதகங்களை, சற்றே நினைவுபடுத்திக்கொள்வது நமது உறக்கத்தை, தொந்தரவு செய்வது என்றாலும், தற்போது தேவை இருக்கிறது. தற்போது பேசப்படும் ‘மகாபாதக செப்டம்பர்’ 11 போல், 1973 ஆண்டு ஒரு செப்டம்பர் 11 இல் சிலியின் தலைநகரில் ஒரு படுகொலை வெறியாட்டம் நடத்தப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிச அரசை, அமெரிக்கத் துணைப்படை அழிக்கப் புறப்பட்டு, ஒரே நாளில் 14,000 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகும் தினம் கைதும் படுகொலையுமாக எத்தனை ஆண்டுகள்! ஆனால், உலகம் இப்போது போல் பெரும் சோகத்தில் மூழ்கிடவில்லை. (தொலைக்காட்சி இப்போது போல் அதைப்படம் பிடிக்காதது மட்டும் காரணம் அல்ல). ஆனால், 9/11 என்று புதிய ஒரு ரகசிய குறியீட்டு எண்ணை உருவாக்க, தற்போது அமெரிக்காவுக்கு ‘பயங்கரவாதம்’ பயன்படுகிறது. இனி உலகை ஆட்டிப்படைக்க இது ஒரு பயங்கர ஆயுதம்.
1945_செப்டம்பர் மாதம் வியட்நாமின் மக்கள் தலைவர் ஹோ சிமின் Democratic Republic of Vietnamஇன் சுதந்திரப்பிரகடனம் செய்கிறார். அதுவரை இந்தோசீனா என்ற பெயரில், பெரும் நிலப்பரப்பை அடிமை கொண்டிருந்த வன் கொடுமையாளர்களுக்கு அது ஏற்கக் கூடியதாக இல்லை. வியட்நாம் மண்ணை இரண்டாகப் பிரித்து, பெரும் நாசத்தை விளைவித்த போரைத் தொடங்கினர். பத்து ஆண்டுகள் பிரஞ்சுப் படையினரின் அட்டூழியம், 1955 முதல் அமெரிக்கப்படையினரின் அட்டூழியம். அப்பொழுதும் வியட்மின்களை பயங்கரவாதிகள் என்றே கூறினர், அமெரிக்க நிர்வாகிகள். 1975 வரை எத்தனை இலட்சம் மக்களின் உயிரிழப்பு, எத்தனை ஆயிரம் பேரின் ஊனம், எத்தனை பெரிய மனநோக்காடு. அதற்காக அமெரிக்கா செய்த செலவு எத்தனை மில்லியன் டாலர்கள். வியட்நாமை இரு பகுதிகளாக்கி பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. இன்றைய ஈராக்கில் ஷியா_சன்னி என்ற பிரிவினையைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் படுகொலை வெடிப்புகள் போல. இதைப்பற்றி ஜான் பிட்சரால் கென்னடி ‘‘‘‘We shall pay any price, bear any burden meet any hardship, support any friend oppose any foe to insure the survival and success of Liberty’’ என மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார். இப்போது உள்ள அமெரிக்க ஜனாதிபதியும் இதுபோல் உலக அமைதியைக் காக்க எதையும் எப்படியும் செய்யத் தயாராக இருக்கிறார்.
1948இல் இரண்டாம் படுகொலைப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்குப்பின் பாதிக்கப்பட்ட யூத இன மக்களைக் காக்க அமெரிக்க_ ஐரோப்பிய நாட்டு மனிதாபிமானிகள் ஒன்றுகூடி ஒரு நாட்டை உருவாக்கினார்கள்: இஸ்ரேல், யூதர்கள் மீது நிகழ்த்தப்பட்ட நாஜி தாக்குதல் வரலாற்றின் பெருங்கொடுமையானதே. ஆனால், ஐரோப்பியர்கள் தமது நிலப்பகுதிக்குள் ஒரு நாட்டை, நிலத்தை ஒதுக்கி ஒரு குடியேற்ற தேசத்தை உருவாக்கித் தந்து தமது மேலான மனிதநேய மெல்லுணர்வுகளை நிரூபித்திருக்கலாம். புதிதாக ஒரு நாட்டை வேறு நாட்டுக்குள் இடம் ஒதுக்கி நட்டதன் மூலம் ஐம்பதாண்டு ரத்தக்களரியை உருவாக்கி விட்டனர். பாலஸ்தீனத்தின் தினசரிப் போராட்டம் இப்படியாகத் தொடங்கியது. அராபிய மண்ணில் தமக்கு ஒரு இராணுவத் தளத்தை ‘இஸ்ரேல்’ என்ற பெயரில் அமெரிக்கா உருவாக்கிக்கொண்ட படுபாதகச் செயலின் விளைவுதான், பின்னால் வந்த பல தனிநபர் தாக்குதல் இயக்கங்கள், யாசர் அராபத் போன்றவர்களையும் பல காலம் பயங்கரவாதி என்றே கூறி வந்தன மேற்கத்திய அரசுகள். பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டதும், சோவியத்துக்கு எதிராக ஒசாமா பின்லாடன் என்ற தாக்குதல் தளபதியை அமெரிக்கா உருவாக்கி உலவவிட்டதும் இந்தப் பின்னணியில்தான்.
1994ஆம் ஆண்டு ஒரு ஏப்ரல் மாத நாளில் ருவாண்டாவில் தொடங்கிய வன்முறை, கடந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான வன்முறைகளில் ஒன்று. இரண்டு ஆப்பிரிக்க கறுப்பின மக்களுக்கிடையிலான வன்மம். ‘ஹ§டு’ என்ற இனமக்கள் ‘டுட்சி’ என்ற இனமக்களில் 80,0000 பேரை மூன்று மாதத்திற்குள் மகாகொடூரமான முறையில் கொன்று குவித்தனர். பல ஹ§டு இன மக்களும் இதில் கொல்லப்பட்டனர். அதற்குப் பிறகும் பல ஆண்டுகள் அந்தப் படுகொலை அங்குமிங்குமாக நிகழ்ந்தபடியே இருந்தது. உயிரிழப்புகள் தொடர்ந்தபடியே இருந்தன. இதில் ஏகாதிபத்திய வெள்ளை ஆட்சியாளர்கள் என்ன செய்ய முடியும் என்று கேட்கலாம். இதைத் தொடங்கி வைத்தவர்களே ஐரோப்பிய ஆட்சியாளர்கள்தான். முதலில் ஜெர்மனியின் ஆதிக்கத்திலும் பிறகு பெல்ஜியத்தின் ஆதிக்கத்திலும் ருவாண்டா இருந்தபோதுதான் ஹ§டு_டுட்சி என்ற எதிர்ப்பு இன அடையாளம் வன்மைப்படுத்தப்பட்டது. தமது ஆதிக்கத்தை நிறுவ _ தொடர இந்த இன வெறுப்பு தூண்டி வளர்க்கப்பட்டது. பழங்குடிச் சமூக அரசுகளாக இருந்த இந்நாட்டின் மக்கள் குழுவினரை ஒன்றாக நெருக்கி நாட்டை உருவாக்கி, 10 பசுக்களுக்குக் கீழ் உள்ளவர்கள் ‘ஹ§டு’ என்றும், 10க்கு மேல் பசுகொண்ட மக்களை ‘டுட்சி’ என்றும் சட்டப்பதிவு செய்து, ‘டுட்சி’ மக்களுக்கு சில அரசு சலுகைகள் தருவதன் மூலம் பெரும் பான்மை ஹ§டு மக்களிடம் வன்மத்தைத் தூண்டி ஒரு நீடித்த இனமோதலை ஏற்படுத்தியது, பெல்ஜிய ஆதிக்கம். 1994_இல் நடந்த படுகொலைக்கு ஆயுத உதவி செய்தது பிரான்ஸ் என்ற பரந்த மனப்பான்மை கொண்ட நாடு. படை உதவியும் செய்ததாக தற்போது தெரியவருகிறது. இனமோதலை முன்பெல்லாம் சிறிய போர்களின் மூலம் தீர்த்துக்கொண்ட வரலாறு, தற்போது நவீன உத்திகளால் படுபயங்கரமாக மாற்றப்பட்டுவிட்டது.


நன்றி: 'தீராநதி'

No comments: