Wednesday, June 20, 2007

குர்ஆனை மனனம் செய்த ஹிந்து மாணவி.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் எடுத்துக்காட்ட முடியாததாகவும் திகழ்கிற இந்தியாவில்,
ஒரு ஹிந்து மாணவி தனது ஒன்பதாம் வயதில் இஸ்லாமிய வேத நூலான திருக்குர்ஆனை
மனனம் செய்ய முன்வந்து வியப்பிலாழ்த்தியுள்ளார். இத்தகவலை பீகார் மாநில மதரசா தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஹேமலதா என்கிற பள்ளிமாணவி நான்காண்டுகளில் ஒரு ஹாஃபிஸ் (திருக்குர்ஆன் மனனம் செய்தவர்) ஆகிவிடுவார் என்று மதீனத்துல் உலூம் மதரஸா ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவியின் தம்பி ஆஷிஷ் வித்யார்த்தியும் குர்ஆனை மனப்பாடம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். "நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், இன்னும் ஊக்கப்படுத்துவோம்" என்று இவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

பல முஸ்லிமல்லாத மாணவர்கள் பீகார் மாநில மதரஸா தேர்வாணையத் தேர்வுகள் எழுதியுள்ளதாக இம்மதரஸா நிர்வாகம் கூறுகிறது.

முன்முடிவுகளை கண்களிலிருந்தும் மனதிலிருந்தும் கழுவ இயலாத முதிர்வயதில் இல்லாமல், இளம் வயதிலேயே இத்தகைய முயற்சிகளில் பரஸ்பரம் ஈடுபடுவது நாட்டின் இணக்கச் சூழலுக்கு நலம் பயக்கும் எனலாம்.

செய்தி!

Wednesday, May 30, 2007

தன் முயற்சியில் தளரா 'தேர்தல் மன்னர்'.

K.பத்மராஜன் என்பது அவர் பெயர். 49 வயதில் 83ம் முறையாக தேர்தல் களம் காணும் அவர் இப்போது ஜூன்15ல் நடக்கவிருக்கும் மாநிலங்களவைதேர்தலிலும் நிற்கிறார். மதுரை மேற்கிலும் களம் காணவிருப்பதாக பெருமையாக கூறிக்கொள்கிறார்.

அப்துல்கலாம், மன்மோஹன்,சோனியா, வாஜ்பாய், ஜெயலலிதா என்று அனைத்து பெருந்தலைகளுக்கு எதிராகவும் போட்டியிட்ட வரலாறு வைத்திருக்கும் அவர், சாதாரண மனிதனுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்கவே 'களம்' காண்பதாகக் கூறுகிறார். (பின்னே, ஏதாவது சொல்ல வேண்டுமில்லையா!)
ஒருவேளை, 'யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது' குறளை அறிந்திருக்கலாம்?!

மாநிலங்களவை வேட்பாளர்களுக்கு குறைந்தது 20 ச.ம.உக்களின் ஆதரவுக்கையெழுத்து வேண்டுமாதலால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிடுவது உறுதி தான் எனினும் திரும்பப்பெறும் வகையில் காப்புத்தொகை ரூ.5000/- கட்டியுள்ளார்.

மக்கள் மன்ற தேர்தல்களில் வெற்றியின் 'இடம்' கிடைக்காவிட்டாலும், கின்னஸ் என்னும் காகித மன்றத்தில் இடம் கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார்.

இதுவரை தேர்தல்களில் பத்து இலட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக கூறும் இவருக்கு, அது ஒரு வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான போஸ்டர் செலவு என்பது தெரியுமா என்று தெரியவில்லை.

வாழ்த்தி வைப்போம்!

நன்றி: The Hindu News update Service 30/05/2007

Monday, May 14, 2007

இட்லிவடைக்கு சட்னி

'இட்லி வடை' யின் பெரியார் பதிவுக்கு நாம் அளித்த சட்னி, சாரி, பின்னூட்டம்:

'பாம்பையும், பார்ப்பானையும் கண்டால், பார்ப்பானை அடி' என்று பெரியார் சொன்னதாகச் சொல்லப்படுவதற்கு யாராவது ஆதாரம் கொடுக்க முடியுமா, ப்ளீஸ்.

பார்ப்பானை அவர் எதிரியாக நினைக்கவில்லை, பார்ப்பனீயத்தைத் தான் கடுமையாக விரோதித்தார் என்பதற்கு அவர் இராஜாஜியுடன் கொண்டிருந்த தனிப்பட்ட நட்பு நல்ல உதாரணம். அரசியல் சமூக வானில் ஒரு பெரியார் தோன்றுவதற்கு இராஜாஜி காரணமாக இருந்தார் என்பது இறைச்சித்தம் தான்.

'மனிதர்களுக்குள் வேற்றுமை பாராட்டாத கடவுளை வணங்குவதில் யாருக்குத்தான் தடையிருக்க முடியும்' என்பதும் பெரியாரின் பொன்மொழி தான். அவரை ஒற்றைப்பரிமாணத்தில் காட்ட முனைந்த முனைப்பில் இத்தகைய கருத்துக்கள் காணாதொழிந்தன. திராவிடக் கட்சிகளே இதற்கு காரணம் என்று சொல்லலாம்.

இன்றைக்கு பார்ப்பனீயம் பார்ப்பனர்களிடம் மட்டுமின்றி, அவர்களை விடவும் அதிகமாக, மற்ற ஆக்களிடம், மற்ற தளங்களிலும் இருக்கிறது என்பதை 'பக்தர்'களும் ஒத்துக்கொள்ள வேண்டும்.அதுபோல, பெரியாரை இன்னமும் ஈ.வே.ரா என்றே இன்னமும் விளித்து, இழிவுபடுத்துவதாக நினைக்கிற கேணத்தனத்தை '.......க்குஞ்சுகளும்' விட்டு விடவேண்டும்.

இன்றைய சமூக மாற்றத்துக்கு தலையாய காரணமான ஒருவரை 'பெரியார்' என்று ஏற்றுக்கொள்ள எந்த பாசமும் குறுக்கீடு செய்யக்கூடாது.பெரியாராக இருந்தாலும் விமர்சனத்துக்கு அப்பாற்படுவதில்லை என்பது பெரியாரே வலியுறுத்திய உண்மை.

பெண்ணியச்சிந்தனைகள் இன்று பட்டொளி வீசிப்பறக்க முதன்மை காரணம் பெரியார் தாம். யார் மறுக்க இயலும். ஒருபக்கம் எதிர்த்தாலும், அதன் தாக்கத்தால் அதை அதிகம் இன்று ஏற்றுச்செயல்படுத்துபவர்கள் பிராமண வகுப்பினரே என்பதும் உண்மை.பெரியாரின் தேவை தீர்ந்துவிடவில்லை என்பதை திராவிட இயக்கங்களே நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

பெரியாரைப் படமெடுத்துக்காட்டுவதை விடவும், ஆராய்ந்து படிப்பினை பெறுவதற்கு ஏராளமிருக்கிறது - இரு தரப்பாருக்கும்!
May 13, 2007 4:49 PM

Monday, January 29, 2007

பேறுயர் வீரமும் உதவாத ஜிகாதும்!

பதிவர் 'நண்பன்' ஷாஜஹானின் இந்தப் பதிவுக்கு இப்படி பின்னூட்டமிட்டிருந்தேன். சிந்தனைக்குரிய பதிவு.

வாசகன் சொல்கிறார்...
சீரிய சிந்தனையைத் தூண்டும் சம்பவத்தை சிறப்பான கவிதையாக்கி இருக்கிறீர்கள்.

எச்சில் துப்பிய
எதிரிக்கும்
காழ்ப்பு காட்டாத
கொள்கையின் கம்பீரத்தில்
பட்டொளி வீசும்
பேறுயர் வீரம்
போர்க்களத்திலும் அன்று!!

ஏகப்பட்ட இரத்தம்
சுவைத்த இச்சையில்
எச்சில் தேடி நீளும்
ஏகாதிபத்திய நாவுகளை
வெற்று உணர்ச்சியில் அமிழ்த்தி
உலர்ந்துப் போகும்
உதவாத ஜிகாது இன்று!!

(என்னுடைய இக்கவிதைப் பின்னூட்டத்தில் சொல், பொருள் குற்றமிருப்பின் தெரிவியுங்கள்).

2:11 PM

நண்பன் சொல்கிறார்...

ஜி, சல்மான், வாசகன் - மிக்க நன்றி.
வாசகன், கவிதை நன்றாக உள்ளது.
நீண்ட நாளைக்கப்புறம் பின்னூட்டத்தில் ஒரு கவிதை.
நன்றி.

அன்புடன்
நண்பன்...
----------------------------------------------
ஒரு நல்ல கவிஞரால் என் கவிதைப் பின்னூட்டமும், அதன் சொல்-பொருளும் அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சி!!

Friday, January 19, 2007

செல்போனில் பறந்த வதந்தி!

தமிழகத்தில் புதிதாக கிளப்பிவிடப்பட்டிருக்கும் அகல்விளக்கு ஏற்றும் வதந்தி பற்றி பலரும் பதிவு எழுதியுள்ளனர்.

வதந்தி வரிசையில் இன்னொன்றாக, முந்தாநாள், செளதி அரேபியாவில் யாரோ கிளப்பி விட்ட ஒரு வதந்தியால் தொலைத்தொடர்பு துறை பணம் அள்ளியது.

"Congratulations! Today is the aaniversary of SAWA. So forward this sms to 10 other people u will get free balance of SR.100/="

இது தான் அந்த வதந்தி. குறுஞ்செய்தியாக வந்தது. இச்செய்தியைப் படித்ததும் வேறெதையும் யோசிக்காமல் நூறு ரியால் பெறும் ஆவேசத்தில், முதல் வேலையாக 10 பேருக்கு sms அனுப்பியவர்கள் நிறைய பேர். எனக்கும் வந்தது.
என் கூட வேலைசெய்பவர்களே அனுப்பியிருந்தனர். அவர்களில் ஒருவரை அழைத்தேன்:

"இங்க வாங்க" என்ன இது எஸ் எம் எஸ்?"
" அவர் எனக்கு அனுப்பியிருந்தாருங்க, அதான் நானும்அனுப்புனேன், நீங்களும் அனுப்புங்க"
"இருங்க, 10 எஸெம்மெஸ்ஸுக்கு ரெண்டர ரியால் ஆகுமே, நீங்க எப்படி யோசிக்காமல் செய்யறிங்க?"
"அட, ரெண்டர ரியாலப் பாத்தா முடியுங்களா..! நூறு ரியால் கெடைக்குதுல்ல.."
"இருங்க, நூறு ரியால் கெடைக்குதுன்னு நிச்சயமாத் தெரியுமா..?"
"பின்னே... எல்லாரும் அனுப்புறாங்களே..!"
"எல்லாரும் அனுப்புறாங்கன்னு சொல்லாதீங்க..., நிச்சயம் 100 ரியால் கெடைக்கும்னு எப்படி கன்ஃபார்மா சொல்றீங்க?"
"என்ன செய்யணும்?"
"முதல்ல.., எஸ்ட்டிசி (தொ.தொ.து)க்கு போன் போடுங்க, ஃப்ரீகால் தானே.."

அவர் அப்படியே செய்துப்பார்த்தார், அவர்கள் 'நம்பாதீர்கள், வதந்தி' என்று சொல்லிவிட, அவர் முகம் சுருங்கிவிட்டது.

"சரி,சரி, போங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

Monday, January 15, 2007

நொய்டா-கொடூரக்கொலைகள்.


நொய்டா அருகில் நிதாரி கிராமத்தில் நடந்துள்ள படுகொலைகள் எத்தனை மோசமான சமூகத்தில் நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்கிற அதிர்ச்சியைத் தருகின்றன. கொலையுண்ட அனைவருமே 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் கொடூரம்.கொலையின் கோரங்களும் நோக்கங்களும் தெரிய வர வர, மனம் பதறுகிறது.


இக்கொடூரக்கொலைகளின் பின்னணி மர்மம் குறித்து பலப்பல செய்திகள் உலா வருகின்றன.

1). மனித உறுப்புக்களை விற்பதற்காக

2). சடலங்களுடன் கொள்ளும் பாலியல் வன்மங்களுக்காக (Necrophilia)

3). பயங்கரமான மதச் சடங்கிற்காக-என்றும்
பல கருத்துகள் உலா வருகின்றன. மிகுந்த மன பிறழ்வும் விகாரமுமடைந்த மனிதர்களின் செயல்கள் இவை என்பதில் சந்தேகமில்லை. இந்த விகாரமும் விவகாரம் குற்றம் புரிந்தவர்களுடன் மட்டுமே முடிவது என்று நாம் கூற இயலாது.

சிறுவர்-சிறுமிகள் காணாமல் போனது பற்றிய புகார்களில் அக்கறை செலுத்தாத காவலர்கள், அப்பகுதி துப்புரவு மற்றும் நகரசபை தொழிலாளர்கள், அலுவலர்கள், மெளனத்தில் மூழ்கியா அக்கம் பக்கத்து மக்கள் என்று நிறையப் பேர் விசாரிக்கப்படவேண்டியவர்கள்.


" இது ஒரு தேசிய அவமானம்" என்கிற எல்.கே.அத்வானியின் கூற்று சரியானதே!
"இந்த சம்பவத்தை அரசியல் கோணத்துடன் அணுகுவது சரியல்ல" என்று கூறிய அவர், "இதுதொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்றார். ஆனால் அரசியல் கட்சிகள் எதுவும் அடுத்து வரும் உ.பி. மாநிலத் தேர்தலில் இக்கொடுமையான சம்பவத்தை பயன்படுத்தாமல் இருக்கும் என்று யாரும் நம்ப மாட்டார்கள்.

பாதிக்கப்பட்ட பெற்றோரும், பிறரும் மிகுந்த கொதிப்புற்று கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். 'சட்டத்தை யாரும் கையிலெடுக்கக் கூடாது' என்று உபதேசம் செய்யுமுன் அவர்களின் மனநிலையைப் புரிந்து, குற்றம் நிரூபணமானதும் கடும் தண்டனைத் தரப்படும் என்கிற உறுதியை அவர்களுக்கு அரசு அளிப்பது சற்றே ஆறுதலாக இருக்கும். அரபு நாட்டுத் தண்டனைகள் வருங்காலத்தில் இத்தகைய அவலங்கள் நிகழாதிருக்க உதவும்.

இந்நிலையில் இன்று வந்த தினமணி செய்தி, மனித உறுப்பு வியாபாரத்துக்காக இக்கொலைகள் நடக்கவில்லை என்று சொல்லும் வகையில் மனித உறுப்புகளின் 12 மூட்டைகள் சிக்கியதாக கூறுகிறது.

எதுவாக இருந்தாலும் முறையான விசாரணை நடந்து இதன் பின்னணியில் இருக்கும் யாரும் தப்ப முடியாத படி - எவ்வித குறுக்கீடுகளும் இல்லாமல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கச்செய்து இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அச்சு மற்றும் மின் ஊடகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வர வேண்டும்.




Sunday, January 14, 2007

சதாம் ஹுசைனின் சமையற்காரர்-ஒரு தமிழர்!

தூக்கிலிடப்பட்ட சர்வாதிகாரி சதாம் ஹுசைனிடம் சமையற்காரராகப் பணிபுரிந்த ஒரு தமிழரின் பேட்டியை இவ்வார குமுதம் வெளியிட்டுள்ளது::: அதிலிருந்து.....

‘‘மிகச் சிறந்த மனிதரை அநியாயமா கொன்னுட்டாங்க...’’ கண்கலங்குகிறார் கீழக்கரையைச் சேர்ந்த காஜாமொய்தீன். மிகச் சிறந்த மனிதர் என்று அவர் குறிப்பிடுவது யாரைத் தெரியுமா? சதாம் உசேனைத்தான்!
சதாம் உசேனுக்கு பல வருடங்கள் சமையல்காரராய் பணியாற்றியவர் இவர். தற்போது திருவல்லிக்கேணியில் ஃபாஸ்ட்புட் ஹோட்டல் வைத்திருக்கிறார். காஜா மொய்தீனை புதுப்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். சதாம் அரண்மனையில் தனது சமையல் அனுபவங்களைக் கூறத் தொடங்கினார்.
‘‘நான் சதாம் மாளிகையில் சமையல்காரராகச் சேர்ந்த முதல் நாள் _ சமையலறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
அங்கே டிப்டாப்பாக உடை அணிந்த ஒருவர் என்னிடம், காலை, மதியம், இரவுக்கான மெனுக்களை ஆர்டர் கொடுத்தார். தினமும் இப்படி... நானும் அவற்றைச் செய்துகொடுத்துக்கொண்டிருந்தேன். அவரை நான் அரண்மனை மானேஜர் என்று நினைத்திருந்தேன். எனக்கு அந்த நாட்டு மொழி தெரியாததால், உடன் பணிபுரிபவர்களிடம் கை ஜாடை மூலம் பேசிக்கொள்வேன். வேலையில் சேர்ந்து பதினைந்து நாட்கள் கழிந்த பிறகு, ஓரளவிற்கு அவர்கள் மொழியைத் தெரிந்துகொண்டு ‘தினமும் எனக்கு சமையல் ஆர்டர் கொடுக்கிறாரே... அவர்தான் மானேஜரா?’ என்றேன்.
‘இல்லை அவர்தான் சதாம்’ என்று பதில் வந்தவுடன் வியந்தேன்.
சதாமிற்கு இந்திய மக்கள் என்றால் உயிர். இந்திராகாந்தியை தன்னுடைய சகோதரி என்றுதான் கூறுவார். இந்திரா சுடப்பட்டு இறந்தவுடன் ஈராக்கில் பணியாற்றிக்கொண்டிருந்த அத்தனை சீக்கியர்களையும் தன்னுடைய சிஸ்டரைக் கொன்றவர்கள் என்று குற்றம்சாட்டி, சிறையில் வைத்துவிட்டார். பிறகு, இந்திய தூதரகம் தலையிட்டு சுட்டவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்திய பிறகு, பத்து நாட்கள் கழித்து அனைவரையும் விடுவித்தார்.
அவருக்கும் நம்ம ஊர் சமையல் என்றால் ரொம்பப் பிடிக்கும். அதுவும் ரசம் என்றால் உயிர். விதவிதமான ரசம் செய்வேன். சாதத்தில் ஊற்றி விரும்பிச் சாப்பிடுவார்.
டீயில் சர்க்கரை போட்டுக்கொள்ளமாட்டார். அதற்குப் பதில் தேன் ஊற்றிச் சாப்பிடுவார். மதியம் சாதம், சிக்கன் ஃப்ரை, காய்கறிகள்... இரவு 9 மணிக்கு ஃப்ரூட் சாலட், ரொட்டி, சிக்கன் ஃப்ரை சாப்பிடுவார். பிரியாணி என்றால் அவருக்கு உயிர். அவருக்கு நான் 40 வகையான பிரியாணிகளைச் செய்து கொடுத்து அவர் பாராட்டைப் பெற்றிருக்கிறேன்.
ஒரு நாள் சதாம் என்னிடம் ‘நான் டெல்லியில் சிஸ்டர் இந்திராகாந்தியைச் சந்தித்தேன். அப்போது நடந்த அந்த விருந்தில், முக்கோண வடிவில் ஒரு ஸ்நாக் கொடுத்து இருந்தார்கள். அது ரொம்ப நல்லா இருந்தது. அதைச் செய்து தர முடியுமா?’ என்று கேட்டார். அது என்னவென்று புரியாமல் குழம்பி, ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிட்டேன். அது வேறொன்றுமில்லை. நம்ம சமோசாதான்!
ஒரு நாள் இருநூறு சமோசா செய்து கொடுத்து அனுப்பினேன். அவரது உறவினர்கள் அனைவரும் அதைச் சாப்பிட்டு அசந்து விட்டார்கள்.
சதாம் உசேன் அரண்மனையில் எந்தச் சமையல்காரரையும் ஆறுமாதத்திற்கு மேல் வைத்திருக்கமாட்டார்கள். காரணம், சதாமின் எதிரிகள் எப்படியாவது சமையல்காரரை ப்ரைன்வாஷ் செய்து பண ஆசைகாட்டி, உணவில் ஸ்லோபாய்சன் கலக்கச் செய்துவிடுவார்கள் என்பதால்தான்.
ஒரு நாள் அரண்மனையிலிருந்து சமையலுக்கு வேண்டிய காய்,கறிகள் வாங்க கடைவீதிக்குச் சென்றேன். நான் அரண்மனை காரில் போய் இறங்கியவுடன் சிலர் என்னிடம் வந்து ‘எப்படியாவது சதாம் சாப்பாட்டில் ஸ்லோபாய்சன் கலந்துவிடு. உனக்குப் பலகோடி பணம் தருகிறோம்’ என்றார்கள். நான் அதை முழுமையாக மறுத்துஅவர்களைக் கடுமையாக எச்சரித்தேன். அவர்கள் மிரட்ட, ‘என் உயிரே போனாலும் அதைச் செய்ய மாட்டேன்’ என்று கூறிவிட்டு, காரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பிவிட்டேன்.
கொஞ்ச நேரத்தில் சதாம் என்னை அழைப்பதாகக் கூறினார்கள். நான் சென்றேன். என்னை அவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.
‘ரொம்ப நன்றி மொய்தீன் என்று அவர் சொன்னபோது, எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் தெரிந்தது, எனது சட்டையில் மைக்ரோசிப் டேப் மாட்டிவிட்டு இருக்கிறார்கள் என்று. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, என் மீது அவருக்கு அபார நம்பிக்கை!
வளைகுடா போரின்போது, சதாம் என்னிடம் ‘மொய்தீன் நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பி விடுங்கள். உங்களை நம்பி குடும்பத்தினர் நிறையப்பேர் இருப்பார்கள். தயவு செய்து கிளம்புங்கள்’ என்றார். நான் மறுத்தேன். ஆனால், அவர்விடவில்லை. ‘நான் எனது நாட்டிற்கும், மண்ணிற்கும் உயிரைவிடலாம். நீங்கள் விடக்கூடாது. கிளம்புங்கள்..!’ என்று வற்புறுத்தினார்.
‘அரண்மனையில் உங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள், தூக்கிச்செல்ல முடியாவிட்டால், ஒரு லாரியில் ஏற்றி அனுப்புகிறேன்’ என்று கூறி அப்படியே செய்தார்.
நான் கிளம்புவதற்கு முன் ஒரு பெரிய பண்டலைக் கொடுத்து ‘எந்தக் காரணம் கொண்டும் விமானத்தில் இதைப் பிரிக்கக் கூடாது. உங்கள் வீட்டுக்குப் போய்த்தான் பிரிக்க வேண்டும்’ என்றார்.
எனக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து, பாக்தாத்திலிருந்து மும்பை கொண்டு வந்து இறக்கிவிட்டுச் சென்றார்கள்.
வீட்டிற்கு வந்து சதாம் கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தேன். உள்ளே அமெரிக்க டாலர்கள்...’’ _ கூறிவிட்டுக் கண்களைத் துடைத்துக்கொள்கிறார் காஜாமொய்தீன்.


நன்றி: குமுதம்